இரு முணைப் பிரச்சனையாக இருக்கும் இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி

بسم الله الرحمن الرحيم

செய்தி: 

காசாவில் சமீபத்தில் நிகழ்பெற்று வரும் நிகழ்வுகளின் காரணமாக ஐரோப்பாவில் இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்புணர்வு அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது, தீவிர வலதுசாரி குழுக்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனையை அதிகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளன. முஸ்லிம்கள் மீது வெளிப்படுத்தப்படும் விரோத உணர்வுகள் மற்றும் பாகுபாடுகளை விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) தூண்டும் அளவுக்கு இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது. 

கருத்து: 

முஸ்லிம்கள் பக்கசார்புடன் நடத்தப்படுவதை தடுப்பதற்கான மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய முயற்சிகளை எடுத்த பிறகும், முஸ்லிம்கள் இஸ்லாமிய வெறுப்புணர்வின் காரணமாக வேலைவாய்ப்பு, துன்புறுத்தல் மற்றும் பக்கச்சார்பான கொள்கைகள் என கட்டமைப்பு ரீதியாக பாகுபாடுடன் நடத்தப்படுவது பரவலாக காணப்படுகிறது. இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான ஐரோப்பிய கவுன்சில் ஆணையம் (ECRI) முஸ்லிம்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, ஐரோப்பிய கூட்டமைப்பின் அடிப்படை உரிமைகள் நிறுவனமான FRA இனவெறியின் காரணமாக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்தான தரவுகளை தொடர்ந்து வெளியிட வேண்டும் எனவும் சமூகத்தில் இனவெறியை களைவதற்கான பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின் எழுச்சி ஐரோப்பாவில் இஸ்லாமிய வெறுப்புணர்வுகளை இயல்பாக்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. பிரான்ஸ் நேஷனல் ரேலி (RN), ஜெர்மனியின் ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி (AfD), மற்றும்  டச்சு பார்ட்டி ஃபார் ஃப்ரீடம் (PVV) போன்ற கட்சிகள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் விரோத சொல்லாடல்களைப் பயன்படுத்தி வருகின்றன.  குர்’ஆணை தடை செய்வது, மசூதிகளை மூடுவது போன்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் குழுக்கள் முன்மொழிந்து வருகின்றன, மேலும் இதற்கான ஆதரவைத் திரட்டுவதற்காக இவை மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி வருகின்றன. இஸ்லாத்தின் மீதான இவர்களுடைய வெளிப்படையான விரோதமானது ஐரோப்பா முழுவதிலும் இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்புணர்வு வளர்வதற்கு கணிசமாக பங்களித்துள்ளது. 

எனினும், இஸ்லாமிய வெறுப்புணர்வை தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுமே பரப்பவில்லை, அவர்களுடன் சேர்ந்து centrists எனப்படும் அரசியலில் வலதும் அல்லாமல் இடதும் அல்லாமல் மைய நிலையை கடைபிடிப்பதாகக் கூறும் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் உட்பட முக்கிய அரசியல் கட்சிகளும் பரப்பி வருகின்றன. இந்த கட்சிகள் பெரும்பாலும் மதச்சார்பின்மை மற்றும் அடையாள அரசியல் எனும் போர்வையைக் கொண்டு தங்களுடைய இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கைகளை மறைத்து வருகின்றன. உதாரணமாக, ஜெர்மனியில், சோசியல் டெமாக்ரட்டிக் கட்சி இடம்பெற்றுள்ள கிரீன் கூட்டணி முஸ்லிம் சமூகம் தான் யூத எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்று குற்றம் சாட்டியுள்ளது, இது ஜெர்மானிய முஸ்லிம்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில், இயற்றப்பட்டுள்ள பிரிவினை எதிர்ப்புச் சட்டம் முஸ்லிம் அமைப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மற்றும் மதச் சின்னங்களை வெளப்படுத்துவதற்கும் தடைகளை விதித்துள்ளது, இந்த சட்டமானது முஸ்லிம் சமூகங்களை குறிவைத்து இயற்றப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர். 

ஆக, தீவிர வலதுசாரிகள் தமது இஸ்லாமிய வெறுப்புணர்வை வெளிப்படையாக வெளிக்காட்டி வரும் வேளையில், இடதுசாரிகள் முஸ்லிம்களின் அடையாளங்களை மறுவடிவமைக்கும் மற்றும் மத வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தை அடையாள அரசியல் எனும் பெயரில் மறைமுகமாக செய்து .வருகின்றனர். மதச்சார்பற்ற விழுமியங்களைப் பேணுகிறோம் என்கிற போர்வையில் கடைபிடிக்கப்படும் இந்த மதச்சார்பற்ற அணுகுமுறையானது முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக கடைப்பிடிப்பதை கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சிகள் வெளிப்படையாக குறைந்த அளவே காணப்பட்டாலும், வலதுசாரி அரசியல்  ஏற்படுத்துகிற அளவுக்கு சமமான தீங்குகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றன மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிராக கடைபிடிக்கப்படும் ஆழமான பக்கசார்புகளை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றன. 

ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நமக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லை. ஏனெனில், ஐரோப்பிய சமூகங்களுக்குள் இஸ்லாத்திற்கு எதிரான பக்கசார்பு நிலைகள் சமீப காலங்களில் மிக அதிகமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன.  ஐரோப்பாவில் இஸ்லாத்திற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவது ஐரோப்பாவில் இருமுணைப் பிரச்சினையாக ஆக்கியுள்ளது, ஏனெனில் தீவிர வலதுசாரிகளும் முக்கிய அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சனைக்கு பங்களித்து வருகின்றன. ஒரு முணையில் தீவிர வலதுசாரிகள் வெளிப்படையாகவே தமது விரோதத்தை வெளிக்காட்டி வருவதும் மறுமுணையில் பிரதான கட்சிகள் நுட்பமான முறையில் மதம்சார்ந்த நடைமுறைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருவதும் முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பின் காரணமாக நிகழும் சம்பவங்களை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாம் ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம்களுக்கு மத்தியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்குவதாக தவறான ஒரு உணர்வை ஏற்படுத்த முயல்கிறது மற்றும் முஸ்லிம் சமூகங்களின் தேவைகளை உண்மையாக நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அது இந்த நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் மீது தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாகுபாடுகளை மறைக்க முயல்கிறது எனும் இந்த கண்ணோட்டத்தைக் கொண்டு பார்க்க வேண்டும்.

  • ஓகேய் பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *