வரலாறு நெடுகிலும் மாற்றம் வேண்டும் எனும் சிந்தனை தான் எப்போதும் மிக வலுவான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது
بسم الله الرحمن الرحيم
செய்தி:
சர்ச்சைக்குரிய வரி உயர்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக போராட்டங்கள் வெடித்ததால் கென்யாவின் தெருக்கள் போர்க்களமாக காட்சியளித்தன. கென்யாவின் இளம் தலைமுறையினர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர், இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுக்கின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு வரி உயர்வை உள்ளடக்கிய நிதி மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த மசோதா கென்யாவில் ஏற்கனவே நிலவிவரும் அன்றாட செலவினங்களின் நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தவே செய்யும் எனக் கருதிய பொதுமக்களின் அதிலும் குறிப்பாக இளைஞர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.
விமர்சனம்:
கென்யாவில் Gen-Zs மற்றும் Millennials என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் சமீபத்தில் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் அரசியல் வர்க்கம் இதற்கு முன்பு எப்போதும் கண்டிராத ஒன்றாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டங்களில் உண்மையான பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் எனக் கோரினர், அதாவது கென்யாவின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் காலனியாதிக்கவாதிகளின் செல்வாக்கு பெருமளவில் இருப்பதை சரிசெய்ய வேண்டும் எனக் கோரினர். கென்யாவில் மட்டுமே இந்த நிலை நிலவவில்லை, மாறாக இது அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலும் பொதுவாக நிலவும் நிலையாக இருக்கின்றது. அங்குள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் நேரடியாகவே மேற்கத்திய காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக இருக்கின்றன.
மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழும், 80% க்கும் அதிகமானவர்கள் குறைந்தளவு வருமானத்தை ஈட்டக் கூடிய முறைசாராத் துறையில் வேலை செய்து வரும் ஒரு சூழலில், மக்களுக்கு மத்தியில் கடும் கோபத்தைத் உண்டாக்கிய இந்தக் கொடூரமான நிதி மசோதாவில் மோட்டார் வாகனம் முதல் பசியாற்றுவதற்கான ரொட்டி வரை கடுமையான வரியை விதிக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம்(IMF), உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கடும்போக்கு கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் மூலமாக கலனியாதிக்க சக்திகள் மூன்றாம் தர நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அங்குள்ள மக்களின் குரல்வளையை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.
மாற்றத்திற்காக அழைப்பு விடுப்பதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர், அவர்கள் தங்களது நாடு எவ்வாறு கடன் வலையில் சிக்கவைக்கப்பட்டது எனும் கேள்வியை முன்வைத்து அதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் தற்போது அதிகாரத்தில் இருக்கும் அரசு மேற்கத்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றும் கோருகின்றனர். மாற்றம் வேண்டும் என்கிற எண்ணம் உண்மையாக இருந்தபோதிலும் Gen-Zக்கள் (இன்றைய இளைய தலைமுறையினர்) மேற்கொண்டு வரும் போராட்டமானது மேற்கத்திய சிந்தனை, செயல்முறை மற்றும் கட்டமைப்புகளின் வட்டத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. மாற்றம் வேண்டும் எனும் சிந்தனை நமது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது, ஏனென்றால் வாழ்க்கையில் ஏற்படும் தேக்கநிலையும் தீய சூழலை மாற்றுவதற்கு எதுவும் செய்யாமல் அதற்கு அப்படியே சரணடைவதும் மக்களையும் நாடுகளையும் அழித்து, அவர்களை மரணிக்கச் செய்யும் ஒரு மிகக்கொடிய தொற்று நோயாகும் அது காலப்போக்கில் அனைவராலும் மறக்கப்பட்ட சூழலையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, சிந்தனைகளில் மிக முக்கியமான சிந்தனையாக மாற்றத்தைப் பற்றிய சிந்தனை இருக்கின்றது, இவ்வகையான சிந்தனையை சோம்பேறிகள் விரும்பமாட்டார்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஏனெனில் மாற்றத்திற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மேலும், ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகளுக்கு பழகிப்போனவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திப்பது தங்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற வேண்டியிருக்கும் என்றும் கருதுகின்றனர். இதன்காரணமாகவே, சிந்தனை ரீதியாக வீழ்ச்சியடைந்தவர்களும் சோம்பேறிகளும் இவ்வகையான சிந்தனையை எதிர்க்கின்றனர், அதே சமயத்தில் அரசியல் வர்க்கத்தினர், உயர்குடி மக்கள் மற்றும் முதலாளிகள் இவ்வகையான சிந்தனைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து மாற்றம் ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கின்றனர். இந்த காரணத்திற்காக, மாற்றம் வேண்டும் எனும் சிந்தனையானது அதைக் கொண்டிருப்பவருக்கு ஒரு ஆபத்தாக இருக்கின்றது. மேலும் இது இடைவிடாமல் அதிகமாக தாக்கப்பட்டு வரும் சிந்தனையாகவும் இருக்கின்றது.
இன்றைய இளைஞர்கள்(Gen-Zs) உட்பட அனைத்து தலைமுறையினரும் தம்மை உணர்ச்சி வயப்படுவதோடு நின்றுவிடாமல் சிந்திக்கும் நிலைக்கு உயர்த்துவது மிகவும் அவசியமாக இருக்கின்றது, அதாவது இன்றைய உலகை மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கு அடிப்படையாக இருக்கும் விஷயம் என்னவைன்பதை சிந்தித்து உணர்வது அவசியமாக இருக்கின்றது. ஏனெனில், இது மட்டுமே ஒருவரை முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயல்பாட்டை செய்யத் தூண்டும் வழியாகும். இன்றைய சூழலில் இஸ்லாம் மட்டுமே மனிதனுக்கு மிகவும் உகந்த சித்தாந்தமாக இருக்கின்றது, ஏனெனில், அது மனிதன் இயற்கையாகவே தேவைகளையும் விருப்பங்களையும் கொண்டவனாக படைக்கப்பட்டுள்ளான் என்று கருதி அவனுடைய பிரச்சனைகளை சரிசெய்ய முயல்கிறது. அது மனிதன் ஒரு குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருப்பவனாக கருதி அதற்கேற்றவாறு அவனுடைய பிரச்சனைகளை சரிசெய்ய முயல்கிறது.
இஸ்லாம் மனிதனை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து அவனுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. மாறாக முதலாளித்துவம் மனிதனை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அது மனிதனுடைய தேவைகளில் சில அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவனுக்குத் தேவையான மற்ற விஷயங்களை புறக்கணிப்பதைக இருக்கிறது.
உதாரணமாக, முதலாளித்துவத்தில் எந்தவொரு பொருளும் அல்லது சேவையும் பலனை அளிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது, மது, போதை வஸ்த்துக்கள், விபச்சாரம் போன்று சமூகத்தில் ஒருவருடைய தேவையை பூர்த்தி செய்யுமேயானால் அது உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. முதலாளித்துவம் அத்தகைய சேவைகளை உற்பத்தி செய்பவரை அல்லது வழங்குபவரை பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதில் பங்களிப்பவராகக் கருதுகிறது. அது உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதன் மூலமும் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. தேவையை நிவர்த்தி செய்வதற்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனும் பார்வை அந்தப் பொருளையும் சேவையையும் உற்பத்தி செய்வதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அது கவலைப்படுவதில்லை, அதே சமயம் இஸ்லாத்தில் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்கப்படாது. கூடுதலாக, முதலாளித்துவம் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் கருவியாக பணத்தை வைத்துள்ளது. எனவே, பணத்தைக் கொண்டிருக்காத நபரால் அந்த பொருளையோ அல்லது சேவையையோ பெற முடியாது. இஸ்லாத்தில், தனிநபர் மற்றும் சமுதாய நலன் இரண்டையும் சேர்த்தே கருத்தில் கொள்ளப்படுகிறது, அதனால் ஒருவருக்கு தேவையான பொருட்களை அல்லது சேவைகளை விலை கொடுத்து வாங்க முடிந்தால் ஒருவர் அவர் அதை வாங்கிக் கொள்வார் அல்லது அவரிடம் பணம் இல்லை என்றால் ஜகாத் அல்லது அரசு வழங்கும் உதவித்தொகை போன்று வேறு வழிகளின் மூலமாக அவற்றை அவர் பெற்றுக்கொள்வார்.
- அலீ உமர் அல்பெய்ட்டி