கிலாஃபா பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

بسم الله الرحمن الرحيم

கிலாஃபா  கட்டாயக் கடமை என்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும்  இமாம்களின் நூல்களில் நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான அறிஞர்கள் இது குறித்து எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களை இங்கு காண்போம். 

 நான்கு  மத்ஹபுகளுடைய  சட்டங்களிலும் நிபுணத்துவம் பெற்று விளங்கிய  இமாம் ஜுசைரி(ரஹ்)  அவர்கள், 

الفقه على المذاهب الأربعة  என்ற நூலில்  கூறுகிறார்கள்:- 

اتفق الأئمة رحمهم الله تعالى على: أن الإمامة فرض، وأنه لا بد للمسليمن من إمام يقيم شعائر الدين وينصف المظلومين من الظالمين وعلى أنه لا يجوز أن يكون على المسلمين في وقت واحد في جميع الدنيا إمامان 

“நான்கு (மத்ஹபுகளுடைய) இமாம்களும் ஒரே தலைமைத்துவம் இருக்கவேண்டியது ஃபர்ளு என்பதில் கருத்தொற்றுமை கொண்டுள்ளார்கள். மேலும் மார்க்கத்தின் விவகாரங்கள் எல்லாவற்றையும் நிலைநாட்டக்கூடிய இமாம் முஸ்லிம்களுக்கு கட்டாயம் இருந்தாக வேண்டும் என்றும் அநியாயம் செய்யப்பட்டவனுக்கு அநியாயம் செய்தவனிடமிருந்து நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் இது இருப்பது அவசியம் என்றும் கூறுகிறார்கள். ஒரே நேரத்தில் உலகில் இரு  தலைமைத்துவம் இருக்ககூடாது  என்பதிலும் இவர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளார்கள்” 

பொன்னானி ஜைனுதீன் மக்தூம்(ரஹ்) அவர்களின் ஆசிரியரும் ஷாஃபி மதுஹபின் சட்ட மேதையுமான  இப்னு ஹஜர் ஹய்தமி  அல்- மக்கீ(ரஹ்) அவர்கள் الصواعق المحرقة على أهل الرفض والضلال والزندقة  என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்:- 

اعْلَم أَيْضا أَن الصَّحَابَة رضوَان الله تَعَالَى عَلَيْهِم أَجْمَعِينَ أَجمعُوا على أَن نصب الإِمَام بعد انْقِرَاض زمن النُّبُوَّة وَاجِب بل جَعَلُوهُ أهم الْوَاجِبَات حَيْثُ اشتغلوا بِهِ عَن دفن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم 

ஸஹாபாக்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களுக்குப்பின் ஓர் இமாம்(கலீஃபா)ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் ஒன்றுபட்டனர். நுபுவ்வத்துடைய காலகட்டத்திற்குபிறகு  இதைஸஹாபாக்கள் ஒரு முக்கிய கடமையாகவே கருதினர். எந்தஅளவிற்கென்றால், நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்யும் வேலையைவிட இந்த கடமையை முக்கிய கடமையாக கருதிஅவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர் 

இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இமாம் அபுல் ஹசன் மாவர்தி (ரஹ்)  அவர்கள்  الأحكام السلطانية  என்ற நூலில் கூறுகிறார்கள் :- 

عَقْدُ الْإِمَامَةِ لِمَنْ يَقُومُ بِهَا فِي الْأُمَّةِ وَاجِبٌ بِالْإِجْمَاعِ 

“உம்மத்தில் (தகுதி பெற்ற) யாரேனும் ஒருவருக்கு   தலைமைத்துவத்திற்கான   ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதுவாஜிப் என்பதில் (அறிஞர்களின்) இஜ்மா இருக்கிறது” 

لَا يَجُوزُ أَنْ يَكُونَ لِلْأُمَّةِ إمَامَانِ فِي وَقْتٍ وَاحِدٍ 

“ஒரே நேரத்தில் இரண்டு ஆட்சித்தலைவர்கள் உம்மத்தில் இருப்பதற்கு அனுமதியில்லை “ 

இரண்டாவது ஷாஃபி என்று போற்றப்படும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் شرح صحيح مسلم என்ற நூலில்  கூறுகிறார்கள்:- 

أجْمَعُوا عَلَى أَنَّهُ يَجِبُ عَلَى الْمُسْلِمِينَ نَصْبُ خَلِيفَةٍ 

“முஸ்லிம்கள் மீது கலீஃபாவை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்ற விசயத்தில் (அறிஞர்கள்) ஒன்றுபட்டனர்” 

وَاتَّفَقَ الْعُلَمَاءُ عَلَى أَنَّهُ لَا يَجُوزُ أَنْ يُعْقَدَ لِخَلِيفَتَيْنِ فِي عَصْرٍ وَاحِدٍ سَوَاءٌ اتَّسَعَتْ دَارُ الْإِسْلَامِ أَمْ لَا 

“ஒரே நேரத்தில் இரண்டு கலீஃபாக்களை தேர்ந்தெடுப்பது கூடாது; அந்த  இஸ்லாமிய நிலப்பரப்பு பரந்து விரிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரியே  என்று  அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்” 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளதாக  الموسوعة العقدية  என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

الْفِتْنَةُ إذَا لَمْ يَكُنْ يَقُومُ بِأَمْرِالنَّاسِ إمَامٌ

“இமாம் (கலீஃபா) நியமிக்கப்படாவிடில் மக்களுடைய விவகாரங்களில் ஃபித்னா ஏற்பட்டுவிடும்” 

இப்னு கல்தூன் அவர்கள் المقدمة எனும் நூலில் கூறுகிறார்கள்:- 

إنّ نصب الإمام واجب قد عرف وجوبه في الشّرع بإجماع الصّحابة والتّابعين لأنّ أصحاب رسول الله صلّى الله عليه وسلّم عند وفاته بادروا إلى بيعة أبي بكر رضي الله عنه …وكذا في كلّ عصر من بعد ذلك ولم تترك النّاس فوضى في عصر من الأعصار واستقرّ ذلك 

 “ஓர் இமாமை (கலீஃபாவை) நியமிப்பது கடமை என்பதற்கான சட்டம் ஸஹாபாக்கள்  மற்றும் தாபிஈன்களின் இஜ்மாவிலிருந்து பெறப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின்  அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதேபோன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வாறே நடைபெற்றது. அக்காலத்தில் சமுகம் எந்த நிலையிலும் தலைமைத்துவம் இல்லாத  நிலையில் இருக்கவில்லை என்பதே இதற்கான ஆதாரமாகும்” 

இமாம் நஸஃபி(ரஹ்) அவர்கள்  العَقِــيـدَة النَّسَـفِيَّـة எனும் நூலில், 

والمسلمون لا بد لهم من إمام، يقوم بتنفيذ أحكامهم، وإقامة حدودهم…….. 

“முஸ்லிம்களுக்கு ஓர் இமாம் கட்டாயம் இருந்தாக வேண்டும்; அவர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார், மேலும் குற்றவியல் சட்டங்களையும் நிலைநாட்டுவார்…” 

அறிஞர் ஜமாலுத்தீன் கஸ்னவி அவர்கள் தமது  أصول الدين  எனும் நூலில், 

لَا بُد للْمُسلمين من إِمَام يقوم بمصالحهم من تَنْفِيذ 

“முஸ்லிம்களின் நலன்களுக்காகவும்(சட்டங்களை) நடைமுறைப்படுத்துவதற்காகவும் ஓர் இமாம் (கலீஃபா) இருப்பது அவசியம்” என்று குறிப்பிடுகிறார்கள். 

இமாம் அப்துர்ரஹ்மான் இழ்துதீன்(ரஹ்) அவர்கள் தமது   المواقف في علم الكلام  எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள் :- 

نصب الإمام عندنا واجب علينا سمعا.. إنه تواتر إجماع المسلمين 

“ஓர்  இமாமை நிறுவுவது நம் மீது கடமையான ஒரு காரியம் ஆகும்… இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் திட்டவட்டமாக கருத்தொற்றுமையைக் கொண்டுள்ளனர்” 

இமாம் குர்துபி அவர்கள்…

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது (அல்- பகரா :30) என்ற வசனத்திற்கான  தஃப்ஸீரில் கூறுகிறார்கள்:- 

هَذِهِ الْآيَةُ أَصْلٌ فِي نَصْبِ إِمَامٍ وَخَلِيفَةٍ يُسْمَعُ لَهُ وَيُطَاعُ، لِتَجْتَمِعَ بِهِ الْكَلِمَةُ 

“ஒரு கலீஃபா அமையவேண்டும் என்பதற்கும், அவருக்கு மக்கள் செவிசாய்த்து கட்டுப்படவேண்டும்” என்பதற்கும் சில குர்’ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்து அது ஒரு கடமை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை” என்று     கூறுகிறார்கள்:- 

يَا داوُدُ إِنَّا جَعَلْناكَ خَلِيفَةً فِي الْأَرْضِ 

தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் கலீஃபாவாக ஆக்கினோம்(ஸாத் :26)”    

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை (பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் .” (அந்நூர்:55)….”

போன்ற வசனங்களையும் ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்……..மேலும் கூறுகிறார்கள் :- 

وَأَنَّهَا رُكْنٌ مِنْ أَرْكَانِ الدِّينِ الَّذِي بِهِ قِوَامُ الْمُسْلِمِين 

“நிச்சயமாக கிலாஃபா என்பது மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாகும்; அதைக்கொண்டுதான் முஸ்லிம்களின் ஆற்றல் உறுதிபெறும்.” 

இப்னு தைமிய்யா அவர்கள் தனது السياسة الشرعية என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்:-

يَجِبُ أَنْ يُعْرَفَ أَنَّ وِلَايَةَ أَمْرِ النَّاسِ مِنْ أَعْظَمِ وَاجِبَاتِ الدِّينِ؛ بَلْ لَا قِيَامَ لِلدِّينِ وَلَا لِلدُّنْيَا إلَّا بِهَا. فَإِنَّ بَنِي آدَمَ لَا تَتِمُّ مَصْلَحَتُهُمْ إلَّا بِالِاجْتِمَاعِ لِحَاجَةِ بَعْضِهِمْ إلَى بَعْضٍ وَلَا بُدَّ لَهُمْ عِنْدَ الِاجْتِمَاعِ مِنْ رَأْسٍ حَتَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ} . رَوَاهُ أَبُو دَاوُد مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ. فَأَوْجَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَأْمِيرَ الْوَاحِدِ فِي الِاجْتِمَاعِ الْقَلِيلِ الْعَارِضِ فِي السَّفَرِ تَنْبِيهًا بِذَلِكَ عَلَى سَائِرِ أَنْوَاعِ الِاجْتِمَاعِ. وَلِأَنَّ اللَّهَ تَعَالَى أَوْجَبَ الْأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنْ الْمُنْكَرِ وَلَا يَتِمُّ ذَلِكَ إلَّا بِقُوَّةِ وَإِمَارَةٍ 

“மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளுள் மிகவும் தலையாயது ஆகும். இல்லாவிடின் தீன் என்பது நிலை நாட்டப்பட முடியாத ஒன்றாகிவிடும். ஆதமுடைய மகனுடைய   (மனிதனுடைய )   விவகாரங்கள் ஒருவருக்கொருவர் தேவை கொண்டதாக இருப்பதோடு, அவை கூட்டாக இல்லாவிடில்  பூரணத்துவம் அற்றதாகவே அமையும். அவ்வாறு கூட்டாக மனிதனுடைய  செயல்பாடுகள் இருக்கும்  நிலையில், அந்த கூட்டு சமுகத்திற்கு ஒரு தலைமை அமைவது கட்டாயமாகும். ’மூன்று முஸ்லிம்கள் ஒரு பயணத்தில் ஈடுபட்டாலும் தமக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொள்ளட்டும்’என்ற அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்து அபூதாவூதில் தொகுக்கப்பட்டிருக்கும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். மேலும் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை நமக்கு கடமையாக்கி இருக்கிறான். அந்த பணி  ஒரு தலைமைத்துவமும் அதிகாரமுமின்றி பூரணம் அடையாது” 

அறிஞர் இப்னு ஹசம் அவர்கள் தனது  الفصل في الملل والأهواء والنحل எனும் நூலில் கூறுகிறார்கள்:- 

اتّفق جَمِيع أهل السّنة وَجَمِيع المرجئة وَجَمِيع الشِّيعَة وَجَمِيع الْخَوَارِج على وجوب الْإِمَامَة 

“தலைமைத்துவம் கட்டாயக்  கடமை என்பதில்    அஹ்லுஸ் சுன்னாவுடைய அறிஞர்களும் அனைத்து ஷிஆ  அறிஞர்களும்  கவாரிஜ்களும் ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள்” 

கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள் 

1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 5, 6 ம்  தேதிகளில்  இந்தியாவில் கிலாஃபத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டனர். அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்:- 

*கிலாஃபாவுக்கு ஆதரவான அபிப்பிராயத்தை மக்களிடத்தில் ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.  

*கிலாஃபத்திற்கு எதிராக இருக்கும் அறிஞர்கள் எனப்படுவோரும், முனாஃபிக்குகளும் புறக்கணிக்கப்படவேண்டும்.   

*கிலாஃபாவைப் பற்றி பேசவும் எழுதவும் தங்களது உயிரை அர்ப்பணிக்குமாறு  உலமாக்கள் தம்மை பின்பற்றுபவர்களிடமிருந்து வாக்குறுதியைப் பெற வேண்டும்.     

*அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும். 

டெல்லியில் 1920 நவம்பர் 19, 20 ம் தேதிகளில் இடம்பெற்ற ஜாமியத்துல் உலமாயே ஹிந்தினுடைய அகில  இந்திய மாநாட்டில் கிலாஃபத்திற்கு  ஆதரவு தெரிவிக்கும் முகமாக இயற்றப்பட்ட  தீர்மானங்களிலிருந்து சில வரிகள்:- 

“ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது பர்ளாகும். உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத்தெளிவான இஸ்லாமிய கடமையாகும். எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குறியவர்களாவார்கள்” 

ஆங்கிலேயருக்கு எதிராக அழைப்பு விடுத்ததற்காகவும் உதுமானிய கிலாஃபத்திற்கு ஆதரவாக அழைப்புவிடுத்ததற்காகவும்  1911 லிருந்து 1915 வரை நான்கு வருடங்கள் சிறையில் கழித்தவரும் கிலாஃபத் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவருமான மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர்  கூறுகிறார்கள்:- 

“கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதால் இந்திய முஸ்லிம்களின் மனதில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது கணிக்க இயலாத ஒன்றாகும். அது இஸ்லாத்திற்கும் அதன் நாகரிகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். இஸ்லாமிய ஒற்றுமைக்கு அடையாளமாக கருதப்பட்ட  மதிப்புமிக்க அமைப்பை தகர்ப்பது இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கும்…, தனித்துவமிக்க இந்த அமைப்பை தகர்ப்பது மக்களை புரட்சிக்கும்  ஒழுங்கின்மைக்கும் கொண்டு சென்றுவிடுமோ என்று  நான் அஞ்சுகிறேன்” (முஹம்மது அலி ஜவ்ஹர் டைம்ஸ், மார்ச் 4, 1924, துருக்கியில் கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதற்கு அடுத்த நாள்). 

மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1920-ல் எழுதிய மஸ்ல-ஏ-கிலாஃபத் (கிலாஃபத்தின் விவகாரம்) என்னும் நூலில் கூறியிருப்பதாவது:- 

“கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை. இந்திய முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாவிதமான சக்திகளையும் முயற்சியும் கொண்டு இதற்காக பாடுபடவேண்டும்”………………… இஸ்லாத்தில் இரண்டு வகை அஹ்காம் ஷரீஆக்கள் இருக்கின்றன. ஒன்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்ற வேண்டிய ஃபர்ளுகள் மற்றும் வாஜிப்கள் ஆகும். மற்றையது நிலங்களின் விரிவாக்கம், அரசியல், பொருளாதார சட்டங்கள் போன்ற தனிமனிதனுக்கு தொடர்பில்லாத ஒட்டுமொத்த உம்மத் தொடர்புடைய சட்டங்கள்” 

ஷைகுல் ஹிந்த் மவுலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்) அவர்கள் மால்டா சிறையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1920 ம் ஆண்டு இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வெளியிட்ட ஃபத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்படுகிறது. அந்த ஃபத்வாவின் சில வரிகள் :- 

 “இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர். நபி (ஸல்)அவர்கள்,  ஸஹாபாக்கள் மற்றும்  அதற்குப்பின் வந்தவர்களின் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா போன்ற பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன. கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சூழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமிய கொடி கீழிறங்கி பறக்கிறது. ஹஸ்ரத் அபூ உபைதா(ரலி), சஅத் பின் அபிவக்காஸ்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும், சுய மரியாதையும் இழந்தமையே இதற்குக்காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் முஸ்லிம்கள் இதனை இழந்துவிட்டார்கள்… இஸ்லாத்தின் புதல்வர்களே! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபத்தை  தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.” மேற்கத்திய கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா? 

(From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h – e- malta), Moulana Syed Muhammed Mian, Jamiat ulama- e- hind, English edition, page 78-79.) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *