ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலானநிலைப்பாடு: அபூபக்கர் அஸ்-சித்தீக்(ரழி)

بسم الله الرحمن الرحيم

நமது வாழ்க்கையானது நாம் நமது வாழ்வில் எடுக்கின்ற நிலைப்பாடுகளின் தொகுப்பாகும். அந்த நிலைப்பாடுகள் தான் நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ்(சுபு)விற்கு முன்பு நமது அந்தஸ்தையும் மதிப்பையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன.  தங்களுடைய வாழ்வில் சிலர் எடுத்த துணிச்சலான நிலைப்பாடுகள் தான் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்ததாகவும், பல நிகழ்வுகளை உருவாக்கியதாகவும் மற்றும் அவர்களைக் கண்டவர்கள் மற்றும் அவர்களைப் பற்றி கேள்விபட்டவர்களுடைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்துள்ளன.  நாம் இங்கு குறிப்பிடப்போகும் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள் யார் என்றால் அவர்கள் அவர்களுடைய காலத்தில் அவமானம் மற்றும் வெட்கப்படக்கூடிய நிலைப்பாடுகளை எடுத்த பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்கள். நாம் இங்கு குறிப்பிடும் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள் யார் என்றால், அவர்கள் குர்’ஆனில் குறிப்பிடப்பட்டவர்களாகவும் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களுடைய சீறாவிலும் இந்த உம்மத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வரலாற்றிலும் நிறைந்து காணப்படுபவர்கள். அவர்களிடமிருந்து நாம் படிப்பினையைப் பெறவேண்டும் என்பதற்காகவே நாம் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறோம்.  மேன்மை பொருந்திய மற்றும் நேர்மறையான எண்ணங்களுக்கான வேட்கையை பெறுவதற்கும், அல்லாஹ்விடமிருக்கும் நல்லவற்றின் மீது ஆசை வைக்கவும் மற்றும் அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அநீதத்தாலும் கொடுங்கோன்மையினாலும் நிறைந்திருக்கும் இந்த உலகில் நீதத்தைக் கொண்டும் அல்லாஹ்(சுபு)வின் வெளிச்சத்தைக் கொண்டும் நிரப்புவதற்குத் தேவையான கண்ணியமிக்க நிலைப்பாடுகளை மீண்டும் எடுப்பதற்கான ஆற்றலை நமது உம்மத் கொண்டுள்ளது என்பதை  உணர்த்துவதற்காகவே நாம் இங்கே துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்களைப் பற்றி குறிப்பிடப் போகிறோம். 

அபூபக்கர் அஸ்- சித்தீக் (ரழி) அவர்களின் அரசியல் கொள்கையும் அவர்களுடைய துணிச்சலான முன்மாதிரியும் 

சில நிலைப்பாடுகள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் தவறை மட்டுமே சரிசெய்வதாக இருப்பதில்லை. மாறாக அந்த நிலைப்பாடுகளின் மூலம் அல்லாஹ்(சுபு) ஒட்டுமொத்த உம்மத்தின் தவறையுமே சரிசெய்வதாக இருக்கின்றன. அந்த நிலைப்பாடுகளின் மூலம் அல்லாஹ்(சுபு) இந்த உம்மத்தை வழிதவறி செல்வதிலிருந்து பாதுகாக்கிறான். அபூபக்கர்(ரழி) அவர்களுடைய வாழ்வில் அவர்கள் எடுத்த பல வீரமிக்க நிலைப்பாடுகள் இதை வெளிப்படுகின்றன. அபூபக்கர்(ரழி) அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளானது அவர்கள் ஆழ்ந்த சிந்தனையைக் கொண்டும், விழிப்புணர்வைக் கொண்டும் மற்றும் உறுதியைக் கொண்டும் எடுக்கப்பட்டதாகவும், மேலும் அவை ஒரு  அடிப்படையைக் கொண்டதாகவும், கொள்கை பிடிப்புள்ளதாகவும் அரசியல் பார்வையைக் கொண்டதாகவும் மேலும் இதுபோல் இன்னும் பல விஷயங்களைக் கொண்டதாகவும் இருந்தன.  

நபி(ஸல்) அவர்களுடைய மறைவின் போது எடுத்த நிலைப்பாடு தான் அபூபக்கர் (ரழி) அவர்கள் துணிச்சலாக எடுத்த முதல் நிலைப்பாடு ஆகும்.  அச்சமயத்தில் அவர்கள் எடுத்த அந்த நிலைப்பாட்டில் அபூபக்கர்(ரழி) அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் மார்க்கத்தைக் குறித்தான புரிதிலில் கொண்டிருந்த நேர்மையும் விழிப்புணர்வும் உள்ளடக்கியிருந்தது.  நபி(ஸல்) இவ்வுலகை விட்டு மறைந்த பொழுது, அவர்களுக்கு மிகவும் தெருக்கமாக இருந்த பல தோழர்களின் சிந்தனையில் தவறு ஏற்பட்டது.  அவர்களில் சிலர் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டதாக கூறுபவரை நான் தாக்குவேன் என்றும் கூறினார்கள்.  எனதருமை சகோதர சகோதரிகளே, நபித்தோழர்களின் உணர்ச்சிகள் பெருக்கோடிக் கொண்டிருந்த இத்தருணத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர்களுடைய அகீதாவில் தடுமாற்றம் ஏற்பட்டது.  

அபூபக்கர்(ரழி) தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு, தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு விழிப்புணர்வையும் சிந்தனையையும் செலுத்தியவர்களாக: உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். என்று கூறினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடைய உற்ற தோழர்களில் ஒருவர் என்பதிலும் அவர்களுக்காக(ஸல்) தியாகம் செய்வதில் முன்னிலையில் இருப்பவர் என்பதிலும் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கமுடியாது.  துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய தெளிவான வீரமிகு நிலைப்பாட்டிற்கு நேர்முரணாக இன்று மக்கள் தமக்கு பிடித்தமான ஆட்சியாளர்கள் வழிகேட்டில் இருப்பதை நியாயப்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். ஆட்சியாளர்கள் நிலையான ஷரீஆ சட்டங்களை உதாசீனப்படுத்தும் சமயங்களில் எல்லாம் இவர்கள் அவர்களை சீர்திருத்த தவறுகிறார்கள். ஆனால், அபூபக்கர் (ரழி) அவர்கள் இவர்களைப் போன்று செயல்பட்டவர்களாக இருக்கவில்லை. மாறாக, அவர்கள்(ரழி) முஸ்லிம்கள் வழிதவறுவதை காண்கையில் உடனடியாக அவர்களை இஸ்லாமிய அகீதாவை நோக்கி மீட்டுக் கொண்டு வந்தவர்களாக இருந்தார்கள், இங்ஙனமே அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மீது கொண்டிருந்த தனது நேசத்தை வெளிக்காட்டினார்கள். 

இந்த தலைப்பின் நமது நாயகரான அபூபக்கர் (ரழி) அவர்களது இரண்டாவதாக எடுத்து துணிச்சலான நிலைப்பாடு என்னவென்றால், ஜகாத்தை வழங்க மறுத்தவர்களுக்கு எதிராக போரிட வேண்டும் எனும் நிலைப்பாட்டை எடுத்தது தான். அவர்களுடைய துணிச்சலான இந்த நிலைப்பாடு இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையிலானதாகவும் இஸ்லாமிய கொள்கையில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள மறுப்பதாகவும், காரியத்தின் அளவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதில் எந்தவொரு சலுகையையும் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டையும், இஸ்லாம் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும் எனவும் இஸ்லாமை நடைமுறைபடுத்தும் விஷயத்தில் Gradualism (படிப்படையாக நடைமுறைபடுத்துதல்) கூடாது எனும் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது.  ஜகாத்தை செலுத்த மறுத்தவர்களின் விஷயத்தில் நபித்தோழர்களில் பலர் கொண்டிருந்த நிலைப்பாட்டையே உமர்(ரழி) அவர்களும் கொண்டிருந்தார்கள். உமர்(ரழி) அவர்கள்:  அபூபக்கர் அவர்களே, லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கூறிய மக்களுக்கு எதிராக எவ்வாறு உங்களால் போரிடமுடியும்?” என்று கேட்டார்கள். எனதருமைச் சகோதரர்களே, அதற்கு சைய்யிதினா அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களுடைய நெஞ்சைப் பிடித்தவாறு: உமரே, நீங்கள் ஜாஹிலிய்யாவில் இருந்தபோது பலமிக்கவராக இருந்து இஸ்லாமுக்குள் நுழைந்தபிறகு பலவீனராக ஆகிவிட்டீரா என்று கேட்டுவிட்டு. அதனுடைய தவணை வந்தவுடன்என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்டதில்லையா? அந்த தவணை வந்தவுடன் ஜகாத்தை பெறுவது கடமையாகிவிடும் என்று கூறி,   ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்’ என்று கூறினார்கள். இந்த நிலைப்பாட்டின் மூலமாக  அபூபக்கர்(ரழி) நமக்கு மார்க்க விஷயத்தில் நாம் மேற்கொள்கிற எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் அவற்றை லாப நஷ்ட கணக்கை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் மாறாக ஷரீஆ கூறுவதின் அடிப்படையில் மட்டுமே அவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அதை கடைபிடிக்கும் விஷயத்தில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையும்  கற்றுத்தந்தார்கள். ஜகாத்தை அலட்சியம் செய்வது மார்க்கத்தை அலட்சியம் செய்வதைப் போன்றது என்று அவர்கள் உணர்ந்தார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள் மொழிந்த மிகமுக்கிய கூற்றுக்களில் ஒன்று: நான் உயிருடன் இருக்கும் வரை மார்க்கத்தை சிதைக்க விடமாட்டேன்.” இன்றைய சூழலில் இதுபோன்ற மகத்தான நாயகர்களின் துணிச்சலான நிலைப்பாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்று பல முஸ்லிம்கள் மார்க்கத்தை சுருக்கியும், அதில் சமரசம் செய்துகொண்டும், அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகளுக்கு மீறி செயல்பட்டும், குஃப்பார்களுடன் தமது அதிகாரத்தை பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.  எனதன்பு சகோதர சகோதரிகளே, இத்தகைய நிலைப்பாடுகளை நாம் நமது தவறுகளின் காரணமாகவும் நமக்கு தொந்தரவுகள் ஏற்பட்டுவிடுமே என்று நினைப்பதின் காரணமாகவும் எடுத்து வருகிறோம். முஸ்லிம்களின் சிந்தனையிலிருந்து இத்தகைய எண்ணங்களை களைவதற்கு இன்றைய முஸ்லிம்கள் ஆரம்பகால நபித்தோழர்கள் எடுத்ததைப் போன்ற துணிச்சலான நிலைப்பாடுகளை எடுப்பது அவசியமாக இருக்கிறது.  அப்போது தான் இந்த உம்மத்தின் சிந்தனையானது ஆரம்பகால நபித்தோழர்கள் கொண்டிருந்ததைப் போன்ற தூய்மையான மற்றும் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்க உதவும்.  

அபூபக்கர்(ரழி) அவர்கள் எடுத்த மற்றுமொரு துணிச்சலான நிலைப்பாடு எதுவென்றால், ரித்தா எனப்படும் முஸ்லிம்கள் பெருங்கூட்டமாக இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்ற நிகழ்வின் போது அவர்கள் எடுத்த நிலைப்பாடு ஆகும். நபி(ஸல்) அவர்கள் மரணித்ததற்குப் பிறகு பல அரபு கோத்திரங்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறினர். முஸைலமா அல்- கத்தாப் எனும் போலி நபியின் படையில் மட்டும் 40,000 வீரர்கள் இருந்தனர். வேறு வார்த்தையில் கூறுவதானால், எந்தவொரு தலையீடும் செய்யாமல் தேர்தல் என்று ஒன்று அன்று நடைபெற்றிருக்குமேயானால் அபூபக்கர்(ரழி) அவர்கள் தோற்றுப்போயிருப்பார்கள். அந்தளவுக்கு பெரும்பான்மையும், செல்வாக்கும் அதுகாரமும் அன்று நபித்தோழர்களிடத்தில் இருக்கவில்லை. மாறாக, அவையனைத்தும் பனூ ஹனீஃபா கோத்திரத்தாரிடமும், முஸைலமாவிடமும் மற்றும் இன்னபிற மக்களிடமும் தான் இருந்தன.  அப்படியிருக்க இந்த சூழ்நிலையை அபூபக்கர்(ரழி) எங்ஙனம் கையாண்டார்கள்? இதுவிஷயத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாடானது வியக்கத்தக்கதாகவும் உறுதிமிக்கதாகவும் இருந்தது. முர்தத்கள் எனப்படும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களின் மீது கருணை எதுவும் காட்டாமல் அவர்களை இஸ்லாமிய செயலாக்க அமைப்புக்கும் ஷரீஆவுக்கும் மீண்டும் கீழ்படியச் செய்வதற்கு  அவர்களுக்கு எதிராக போர் புரிவதற்காக படைகளை அனுப்பிவைத்தார்கள். அல்லாஹ்(சுபு) அபூபக்கர்(ரழி) அவர்களின் மீது புரிந்த அருளின் மூலமாக அவர்கள் இஸ்லாமிய அரசின் அதிகாரத்தை உறுதிபடுத்தினார்கள் மற்றும் இஸ்லாமிய செயலாக்க அமைப்பு கொண்டு வந்த சட்டம் மீறப்படாமல் பாதுகாத்தார்கள்.   அச்சமயத்தில் அவர்கள் தொடுத்த போர்களில் ஒன்றின் விளைவாக இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய பல முர்ததுகள் இஸ்லாத்திற்கு மீண்டும் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் மீதானையாக, அபூபக்கர் (ரழி) இத்தகையதொரு துணிச்சலான நிலைப்பாட்டை அன்று எடுத்திருக்கவில்லை என்றால், அந்த மக்கள் அப்போது இஸ்லாமிய அரசைக் காட்டிலும் ஆதிக்கம் செலுத்தியவர்களாகவும் பலமிக்கவர்களாகவும் இருந்திருப்பார்கள். 

அபூபக்கர்(ரழி) அவர்கள் எடுத்த மற்றுமொரு துணிச்சலான நிலைப்பாடு எதுவென்றால், உசாமா பின் ஜைத்(ரழி) அவர்களின் தலைமையிலான படையை ஷாமுக்கு அனுப்பிவைத்தது தான். இந்த நிலைப்பாடு இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் அவர்களுடைய கட்டளைகளை பின்பற்றுகிற அவர்களுடைய துணிச்சலான பண்பையும் வெளிப்படுத்தியதாக இருந்தது.  எனதருமை சகோதர சகோதரிகளே நினைத்துப் பாருங்கள்! நபி(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு, அரேபிய தீபகற்கம் முழுவதும் ரித்தா எனப்படும் மார்க்கத்தைத் துறந்து செல்லும் அலை அடித்துக் கொண்டிருந்தது. சிந்தித்துப் பாருங்கள் சகோதர  சகோதரிகளே உள்நாட்டில் 10க்கும் மேற்பட்ட பெரியளவிலான கிளர்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழலை சற்று உங்களுடைய நினைவில் ஓட்டிப் பாருங்கள். அப்படி இருக்கையில் அந்த நாட்டின் தலைவரோ தமது அண்டை நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக அவருக்கு முன்னாள் இருந்த தலைவர் தயார்படுத்திய படையை அனுப்பி வைத்த அத்தருணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்.   அபூபக்கர்(ரழி) அவர்கள் அந்த சூழ்நிலையை சாதாரண மக்களைப் போல் பார்க்கவில்லை. மாறாக, உஸாமா(ரழி) அவர்களுடைய படையை அனுப்பி வைத்த போது அதனுடைய சூழ்நிலையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மட்டுமே நன்கறிந்தவர்கள் என்பதே அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தது, எனவே அவர்கள் கூறுவார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த ஒரு படையை நான் எப்படி தடுத்து நிறுத்தமுடியும்?” எனவே, பல்லாயிரக்கணக்கானவர்கள் முர்தத் ஆகி இஸ்லாத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த வேளையிலும், வேறு சிலரோ ஜகாத்தை தர மறுத்துக்கொண்டிருந்த வேளையிலும் அவர்கள் உஸாமா(ரழி) அவர்களுடைய படையை ரோமர்களுக்கு எதிராக அனுப்பிவைத்தார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அபூபக்கர் (ரழி) அவர்கள் நன்கறிந்திருந்தார்கள், ஆனாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய வழிமுறையில் திடமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.   உஸாமா(ரழி) அவர்களின் படை புறப்பட்டுச் சென்றது, அது ரோமர்களை அதிர்ச்சியடையச் செய்தது, அரபுகளிடத்தில் போரிடுவதற்கான எண்ணத்தை கைவிடச் செய்தது. அரபுகள் இவ்வாறு நினைத்ததற்கான காரணம் என்னவென்றால் மதீனாவை பாதுகாப்பதற்குப் போதுமான வீரர்களை கொண்டிருக்காமல் அபூபக்கர்(ரழி) அவர்களால் இந்தப் படையை அனுப்பிவைத்திருக்க முடியாது என்பது தான்.  ஆனால் உண்மை என்னவென்றால் மதீனாவில் போதிய பாதுகாப்பு இல்லை என்பது தான். ஆனால் அவர்களுக்கு அல்லாஹ்(சுபு)வின் மீதி திடமான நம்பிக்கை இருந்தது. ரோமர்கள் போரிலிருந்து பின்வாங்கினார்கள், உஸாமாவின் படை போரிடமலேயே வெற்றிவாகை சூடி வந்தது, முர்தத்களாகிப் போன கோத்திரங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன, இதன்மூலம் அபூபக்கர்(ரழி) இஸ்லாமிய அரசில் ஒற்றுமையையும் பலத்தையும் மீட்டெடுத்தார்கள் இவையனைத்து நிகழ்வுகளின் போதும் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் எந்தவொரு சட்டத்திலும் கட்டளையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்தது நமக்கான மிகப்பெரிய படிப்பினையாக இருக்கிறது. இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிற தலைவர்கள் மற்றும் துணிச்சல்மிக்கவர்களின் தேவை இந்த உம்மத்திற்கு இப்போது அதிகமாக தேவைப்படுகிறது. அல்லாஹ்(சுபு) நம் அனைவருக்கும் இத்தகைய துணிச்சலான நிலைப்பாடுகளை மீண்டும் எடுப்பதற்கான பாக்கியத்தை தந்தருள்புரிவனாக. அல்லாஹ்(சுபு) அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அவனே நமது பாதுகாவலன். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *