ஷேக் அபூ நிசார் அஸ்- ஷாமி வழங்கும் துணிச்சலான நிலைப்பாடு: உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) – நேர்வழியை நோக்கி துணிச்சலாக உம்மத்தை மீட்டெடுத்தவர்
بسم الله الرحمن الرحيم
நமது வாழ்க்கையானது நாம் நமது வாழ்வில் எடுக்கின்ற நிலைப்பாடுகளின் தொகுப்பாகும். அந்த நிலைப்பாடுகள் தான் நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ்(சுபு)விற்கு முன்பு நமது அந்தஸ்தையும் மதிப்பையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. தங்களுடைய வாழ்வில் சிலர் எடுத்த துணிச்சலான நிலைப்பாடுகள் தான் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்ததாகவும், பல சாதனைகளை புரிவதற்கு உதவியதாகவும் மற்றும் அவர்களைக் கண்டவர்கள் மற்றும் அவர்களைப் பற்றி கேள்விபட்டவர்களுடைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்துள்ளன. நாம் இங்கு குறிப்பிடப்போகும் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள் யார் என்றால் அவர்கள் அவர்களுடைய காலத்தில் அவமானத்திற்குரிய மற்றும் வெட்கப்படக்கூடிய நிலைப்பாடுகளை எடுத்த பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்கள். நாம் இங்கு குறிப்பிடும் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்கள் யார் என்றால், அவர்கள் குர்’ஆனில் குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களுடைய சீறாவிலும் இந்த உம்மத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வரலாற்றிலும் நிறைந்து காணப்படுபவர்கள். அவர்களிடமிருந்து நாம் படிப்பினையைப் பெறவேண்டும் என்பதற்காகவே நாம் துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறோம். மேன்மை பொருந்திய மற்றும் நேர்மறையான எண்ணங்களுக்கான வேட்கையை பெறுவதற்கும், அல்லாஹ்விடமிருக்கும் நல்லவற்றின் மீது ஆசை வைக்கவும் மற்றும் அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அநீதத்தாலும் கொடுங்கோன்மையினாலும் நிறைந்திருக்கும் இந்த உலகில் நீதத்தைக் கொண்டும் அல்லாஹ்(சுபு)வின் வெளிச்சத்தைக் கொண்டும் நிரப்புவதற்குத் தேவையான கண்ணியமிக்க நிலைப்பாடுகளை மீண்டும் எடுப்பதற்கான ஆற்றலை நமது உம்மத் கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே நாம் இங்கே துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தவர்களைப் பற்றி குறிப்பிடப் போகிறோம்.
ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலோ தனது தனிப்பட்ட வாழ்க்கையை சீரமைக்க வேண்டும் என்றாலோ அது சாதாரண விஷயம் கிடையாது. அப்படியிருக்க ஒருவர் வழிகேட்டிலிருந்து நேர்வழியை நோக்கி ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்றியமைப்பது என்பது பெரும் சாதனைக்குரிய விஷயமாக அல்லாஹ்(சுபு) பார்க்கிறான். நாம் இன்று பார்க்கப்போகும் நேர்வழியில் வழிநடத்தப்பட்ட சாதனையாளர் யாரென்றால், இரண்டாவது உமர் பின் அல்- கத்தாப்(ரஹ்) என்றும் ஐந்தாவது நேர்வழியில் வழிநடத்தப்பட்ட கலீஃபா என்றும் அழைக்கப்பட்ட உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் தான். முடியாட்சிக்கு மாறிப்போயிருந்த இந்த உம்மத்தை மீண்டும் நபித்துவ வழிமுறையிலான கிலாஃபா ஆட்சிமுறைக்கு வெறும் முப்பதே மாதத்தில் திருப்பிய சாதனைக்குச் சொந்தக்காரர் அவர்.
அவருடைய சாதனைகள் மகத்தானது. அவர் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சிறப்பு சுலுகைகள் வழங்கப்பட்டு வந்த காலகட்டத்தில், அதிகாரிகள் வழிதவறி போயிருந்த காலகட்டத்தில் மற்றும் அரசு நிர்வாகத்தில் ஊழல்கள் மிகைந்திருந்த காலகட்டத்தில் அநீதம் பெருகியிருந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் செயல்பட்டது தான் அதற்குக் காரணம். அப்போது நிலவிய பிரச்சனையின் விஷயத்தில் உமர்(ரஹ்) அவர்கள்: “என்னால் என்ன செய்துவிட முடியும்? மக்கள் ஊழலுக்கு பழகிவிட்டதால் படிப்படியாகத் தான் அதை நான் சரிசெய்ய முடியும். நான் எனது குடும்பத்தினரையும் எனது கோத்திரத்தினரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.” அல்லது இதுபோன்று நாம் இன்று செவியுறும் வேறு எந்தவொரு காரணத்தையும் கூறவில்லை. மாறாக, அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நொடி முதல், அவர்கள்(ரஹ்) அவர்களுடைய கோத்திரமான பனூ உமைய்யாவைச் சார்ந்த மக்களை சந்தித்து, அவர்களிடம் அநியாயமாக சொந்தம் கொண்டாடி வரும் நிலங்கள், சொத்துக்கள் மற்றும் அடிமைகள் அனைத்தையும் நீங்கள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் எனக் கோரினார்கள். பிறகு, அவர்கள் இளவரசர்கள் அனுபவித்து வந்த சிறப்புச் சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்தார்கள், ஊழலில் சிக்கியிருந்த ஆளுநர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்தார்கள் மற்றும் அரசின் நிர்வாகத்துறை கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்தார்கள். ஊழல் செய்தவர்களுக்கு பதிலாக நேர்மையான ஃபுகஹாக்களை அதாவது சட்ட வல்லுநர்களை நியமித்தார்கள். இராக்கிலுள்ள பைதுல்மால்(அரசு கஜானா) காலி ஆகும் அளவுக்கு சட்டப்படி உரிமை கொண்டாடி வந்தவர்களுக்கு முந்தய ஆட்சியாளர்களால் அவர்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். அதனால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஷாமிலிருந்து பெற்று சரிசெய்தார்கள். அநியாயமாக விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்கள் பலவற்றை அவர்கள் ரத்து செய்தார்கள். மேலும் விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்தார்கள். அதேபோல், சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன்களுக்காக செலவு செய்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் முன்பு முஸ்லிமல்லாதவர்களாக இருந்தபோது அவர்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யாவை ரத்து செய்தார்கள். இவ்வனைத்து செயல்பாடுகளின் காரணமாக விவசாயமும் வர்த்தகமும் வளர்ச்சியடைந்தது, ஜகாத், கராஜ் மற்றும் உஷ்ர் வருமானம் அதிகரித்தது, இதனால் அரசின் வருமானமும் பெருகியது. ஜகாத்தின் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள், அவருடைய ஆட்சிகாலத்தில் வறுமை என்று ஒன்று இல்லாத அளவுக்கு பொருளாதார நிலையை மாற்றியமைத்தார்கள். ஜகாத்தை வசூலிப்பவர்கள் பணத்துடன் தெருக்கள் மற்றும் சந்தைகளுக்குச் சென்று: “ஏழைகள் யாராவது இருக்கிறீர்களா?”, “தேவையுடைய மக்கள் யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்பார்கள். ஆனால் மக்கள் அந்தப் பணத்தை பெறுவதற்கு செல்ல மாட்டார்கள். உமர்(ரஹ்) அவர்களுடைய ஆட்சிகாலத்தில் இந்த விஷயம் அதாவது உபரியாக இருக்கும் ஜகாத் பணத்தை செலவழிப்பதற்கான வழியை கண்டுபிடிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. அவருடைய ஆட்சி 13,000,000 சதுர கிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்திருந்த போதிலும் ஜகாத்தைப் பெறுவதற்கு ஒருவர் கூட அப்போது இருக்கவில்லை. எனவே, அவர் அந்தப் பணத்தைக் கொண்டு அடிமைகளை விலைக்கு வாங்கி விடுதலை செய்யுமாறும், திருமணம் ஆகாமல் இருக்கும் வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் உத்தரவிட்டார்கள். உமர்(ரஹ்) அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அன்லாஹ்(சுபு) இன்று முஸ்லிம் நிலங்களில் எண்ணற்ற அளவுக்கு அருள்புரிந்துள்ள எண்ணெய் வளங்கள், எரிவாயு அல்லது பெருமளவிலான இயற்கை வளங்கள் போன்று எதுவுமில்லாத நிலையிலும் வறுமை என்று ஒன்று அறவே இல்லாமல் போனது. நேர்வழியில் அவர்கள் புரிந்த ஆட்சி தான் அதற்குக் காரணமாக இருந்தது.
குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் எடுத்த ஒரு துணிச்சலான நிலைப்பாடு என்னவென்றால் இஸ்லாமிய அறிவை(இல்ம்) மக்களிடத்தில் பரவச் செய்தது தான். அவர்கள் ஃபுகஹாக்களையும் ஆலிம்களையும் அனுப்பி மக்களுக்கு மார்க்கத்தை போதித்தார்கள். மேலும், இல்மை கற்றுக்கொள்வதற்காக தம்மை அற்பணித்துக் கொண்டவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்கள். இதன் காரணமாக, பாரசீகம், எகிப்து மற்றும் இதர நகரங்களில் இஸ்லாமை தழுவிக்கொள்ளும் மக்கள் அதிகரித்தனர். அல்லாஹ்(சுபு)வின் மார்க்கத்திற்கு அவர் மிகப்பெரிய அளவில் உதவிபுரிந்த வழிகளில் நபிமொழிகளை பதிவுசெய்ய கட்டளையிட்டதும் ஒன்று. இதன்மூலம் அவர் ஹதீஸ்கள் தொலைந்து போவதிலிருந்தும் இட்டுக்கட்டப்படுவதிலிருந்தும் பாதுகாத்தார். சுல்தான்கள் வழக்கமாக கடைபிடிக்கும் மெய்க்காவலர்களின் பந்தோபஸ்துடன் படைசூழ பயணிப்பதை தவிர்த்துக் கொண்டு தனக்கு சொந்தமான கழுதையில் பயணித்து வந்தார். அவர் எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் மற்றும் தேவையுடையவர்கள் வசிக்கும் பகுதியில் தனக்கான இல்லத்தை அமைத்துக் கொண்டார்கள். நோய்வாய்ப்பட்ட மற்றும் தமது தேவைகளை பூர்த்திசெய்ய முடியாதவர்களை கவனித்துக் கொள்வதற்கென ஒரு நபரை நியமித்தும் அவர்களுக்கு தேவையான நிதியை வழங்கியும் வந்தார்கள். அவர்களுடைய கவலை மிருகங்களிடத்திலும் விரிவடைந்தது, மிருகங்களின் மீது அவர்கள் கொண்டிருந்த கருணையின் காரணமாக சுமைகளை சுமந்து செல்லும் மிருகங்களின் மீது வைக்கப்படும் சுமைக்கு ஒரு அளவை நிர்ணயித்தார்கள். உமர்(ரழி) அவர்கள் முதன்முதலாக பதவியேற்ற போது, தனது மனைவியை அழைத்து அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் நகைகள் அனைத்தையும் பைதுல்மாலிடம் கொடுத்துவிட்டு என்னுடன் வாழ ஆசைப்படுகிறீர்களா அல்லது என்னைவிட்டு விட்டு உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டார்கள். இத்தனைக்கும் அவருடைய மனைவி ஒரு கலீஃபாவின் மகளாகவும், ஒரு கலீஃபாவின் மனைவியாகவும், கலீஃபாக்களின் சகோதரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மனைவி அவருடன் தொடர்ந்து வாழ்வதை தேர்ந்தெடுத்து, அவரிடம்: “உங்களைவிட அதிகமாக தொழுபவரையும் நோன்பு நோற்பவரையும் நான் இதுவரை கண்டதில்லை, அதேபோல் உங்களை விட அல்லாஹ்(சுபு)வை அஞ்சுபவரையும் நான் கண்டதில்லை.” என்று கூறினார்கள்.
சகோதர சகோதரிகளே, இப்படித் தான் கலீஃபாக்கள் உம்மத்தை மறுமலர்ச்சி அடையச் செய்தார்கள், இத்தகைய முழுமையான மாற்றத்தைத் தான் அவர்கள் உம்மத்தின் அனைத்து நிலைகளிலும் ஏற்படுத்தினார்கள். இந்த உம்மத் கொடுங்கோலர்களால் ஆட்சிசெய்யப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் அபரிதமான இயற்கை வளங்களையும் மக்கள் வளங்களையும் கொண்டிருந்த போதிலும் அது மிகவும் பலவீனமான நிலையிலும், ஏழ்மையான நிலையிலும் மற்ற தேசங்களை சார்ந்திருக்கும் அவல நிலையிலும் தான் உள்ளது. எங்ஙனம் உமர்(ரஹ்) அவர்கள் இந்த உம்மத்தை கொடுங்கோல் ஆட்சிமுறையிலிருந்து மீட்டெடுத்தார்களோ அங்ஙனமே அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு இஸ்லாமிய அழைப்பாளர்களின் கடும் முயற்சியின் மூலமாக மீண்டுமொருமுறை கொடுங்கோல் ஆட்சிமுறையிலிருந்து நபித்துவ வழிமுறையிலான ஆட்சிமுறையை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ்(சுபு) நமக்கு வாக்களித்துள்ளான். எனவே, மேன்மை பொருந்திய இஸ்லாமை மீண்டும் நமது வாழ்வில் நடைமுறைபடுத்துவதற்காக பாடுபடுவோமாக. அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் மாறும், அன்று இஸ்லாத்தின் நீதமானது கிழக்கிலிருந்து மேற்கு வரை நிச்சயமாக பரவும்.