சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான தீர்வுகள் குர்’ஆன் மற்றும் சுன்னாஹ்வில் உள்ளன

بسم الله الرحمن الرحيم

உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் முதலாளித்துவ செயலாக்க அமைப்பு சுற்றுச்சூழல் குறித்து கவனத்தை செலுத்தி வருவதாக வாயளவில்  கூறி வருகிறது, ஆனால் உண்மையில் அது உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் மற்றும் என்ன விலை கொடுத்தாகினும் அதனுடைய  செல்வந்தர்களை வளப்படுத்துவதிலும் மட்டுமே தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது. ஏனெனில், முதலாளித்துவம் மனிதர்கள் “ஒரு குறிப்பிட்ட வரையறையிலான வளங்களைக் கொண்ட உலகில் வரம்பற்ற ஆசைகளைக் கொண்டுள்ளார்கள்” என்கிற உள்ளார்ந்த பண்பை கொண்டிருப்பது தான்.  

இந்த வரம்பற்ற ஆசைகளை நிறைவேற்றுவதற்காக உற்பத்தியை அதிகரித்து நிரந்தர வளர்ச்சியை காண்பதே முதலாளித்துவம் இந்த பிரச்சனைக்கு  முன்வைக்கும் தீர்வாக இருக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) ஒரு நாடு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டும் மிகமுக்கிய அறிகுறியாக இருக்கிறது என முதலாளித்துவம் பார்க்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நாடு கொண்டுள்ள அனைத்து வரம்பற்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அது எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை வைத்தே அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவக் கோட்பாடு கொண்டுள்ள பல குறைபாடுகளில் ஒன்றை இங்கே நாம் காணலாம், அதாவது ஒரு நாடு அதிக உற்பத்தியை கொண்டிருக்கக்கூடும், ஆனால் அதேநேரத்தில் அந்நாட்டில் வாழும் மக்களில் பாதி பேர் வறுமையில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதற்கான காரணம் என்னவெனில், முதலாளித்துவம் ஒருசில உயர்குடி மக்களைத் தவிர அனைவருடைய தேவைகளை கவனித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்பதும், மேலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெற்றிக்கான அளவீடாக எடுத்துக்கொண்டிருப்பது என்பது அந்த உற்பத்தியானது எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விவரத்தை முதலாளித்துவம் நமக்கு கூறாமல் விட்டிருப்பதும் தான். இதனுடைய விளைவுகள் என்னவென்றால் ஒருசில  உயர்குடி மக்கள், பெருவணிக நினுவனங்கள் மற்றும் வசதிபடைத்த நாடுகளே இந்த முதலாளித்துவக் கோட்பாட்டிலிருந்து பயன் பெற்று வருகின்றன, அதே நேரத்தில் இதனுடைய கொள்கைகளையும் இவர்களே தீர்மானிக்கின்றனர். நிலையான சுற்றுச்சூழல் கொள்கைகளுடன் மோதல் போக்கை உருவாக்கும் இத்தகைய தவறான அமைப்புமறை வடிவமைப்பின் காரணமாக ஏறபடுத்துகிற பாதிப்புகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. அது வளர்ச்சியை எட்டவேண்டும் என்பதற்காக இக்கிரகத்திலுள்ள விலைமதிப்பற்ற மற்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை எரித்து, சுற்றுச்சூழலில் அனைத்து விதமான மாசுபாடுகளையும் ஏற்படுத்துகிறது. எல்லாவற்றையும் தாண்டி பலரின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. 

இறைவனால் இறக்கியருளப்பட்ட இஸ்லாமிய அமைப்பு முதலாளித்துவத்துக்கு முற்றிலும் முரணானதும் அடிப்படையில் வேறுபட்டதுமாகும். உற்பத்தியை பெருக்குவதை மட்டுமே இஸ்லாம் தனது அடிப்படை பண்பாக கொண்டிருக்கவில்லை, மாறாக அது அந்த செல்வத்தை சரியான முறையில் எங்ஙனம் விநியோகிக்கப்படுகிறது என்பதில் அதிக கவனம் செலுத்துவதாக இருக்கின்றது. அனைவருக்கும் தங்களுடைய வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உண்பதற்கு போதிய  உணவு, உடுப்பதற்கு உடை மற்றும் தங்குவதற்கு இடம் போன்றவற்றை கிடைக்கச் செய்வதே அதனுடைய தலையாய கடமையாகக் கொண்டுள்ளது, முதலாளித்துவத்தைப் போன்று சிலருக்கு மட்டும் அவற்றை உறுதி செய்யும் பண்பை அது கொண்டிருக்கவில்லை. 

செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் புழக்கத்தில் இருக்கக்கூடாது என்று அல்லாஹ் (சுபு) வலியுறுத்துகிறான். அவன் (சுபு) செல்வம் சம்மந்தமாக கீழ்வருனவற்றை கூறுகிறான்: 

[كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ] 

“மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது)”  

[சூரா அல்-ஹஷ்ர்: 7]. 

[وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ] 

“எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.” 

[சூரா அல்-ஹஜ்: 28]. 

முதலாளித்துவம் நிலைத்திருக்கும் வரை சுற்றுச்சூழலை “பாதுகாப்பதற்கு” நாம் எத்தனை கொள்கைகளை மாற்றியமைத்தாலும் சரியே, உண்மையான மாற்றம் எதையும் நம்மால் கொண்டுவரவே முடியாது. 

ஏனெனில் மனிதகுலம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு இந்த முதலாளித்துவமே மூலக்காரணமாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு இது எந்தவிதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடாது ஏனெனில் குர்’ஆனில் இது குறித்து நம்மை அல்லாஹ் (சுபு) மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளான். அதாவது, நம்மை படைத்தவனான அல்லாஹ் (சுபு) அருளிய  இஸ்லாத்தின் வழிகாட்டுதலை தவிர்த்துவிட்டு வேறு எந்த வழிமுறையையும் நாம் பின்பற்றும்போது இம்மனிதகுலம் பேரழிவுகளையே சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளான். ஜனநாயகமும் முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை, பெரும்பாலான முதலாளித்துவ சமூகங்களின் அடித்தளங்கள் மதச்சார்பின்மையின் அடிப்படையில், அதாவது வாழ்க்கையிலிருந்து (மனித விவகாரங்களிலிருந்து) மதத்தைப் பிரிக்கக் கூடிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது மனிதர்களே அவர்களின் மனோஇச்சைகளின் அடிப்படையில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுவே, அல்லாஹ்வின் (சுபு) வார்த்தையிலிருந்து மனிதனை விலக்கி வைப்பதற்கு காரணமாக இருக்கின்றது, அது சுற்றுச்சூழல் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாசங்களை உண்டாக்கியும் வருகிறது. முஹம்மது (ஸல்) அவர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற செய்தியை நாம் புறக்கணிக்கும் போது நமக்கு என்ன நடக்கும்? 

[وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ] 

“அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. 

[சூரா அல்-பகரா 2:205]. 

இஸ்லாம் மட்டுமே, மனிதர்களின் வாழ்க்கை விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்கமைப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு நித்திய ஆதாரமான குர்’ஆனை அருளப்பெற்றுள்ளது, துரதிர்ஷ்டமாக இந்த வழிகாட்டுதலை தான் நாம் பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறோம். 

முற்றிலும் அறிந்தவன் நமக்கு இவ்வாறு வழிக்காட்டுகிறான்: 

[وَكُلُواْ وَٱشۡرَبُواْ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ] 

“உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” 

[சூரா அல்-அராஃப் 7:31]. 

[وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ شَيۡءٖ مَّوۡزُونٖ * وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَ وَمَن  لَّسۡتُمۡ لَهُۥ بِرَٰزِقِينَ * وَإِن مِّن شَيۡءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٖ مَّعۡلُومٖ] 

“பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம். நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.” [சூரா அல்- ஹிஜர் : 15: 19-21] 

[وَلاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ بَعْدَ إِصْلاَحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ] 

“(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. 

[சூரா அல்- அ’ராஃப் 7:56]. 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

«إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ» 

“இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி,நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.” (முஸ்லிம்).  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ» 

“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்”. (புஹாரி) 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  

“இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 

«فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ» 

‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி) 

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இன்று நாம் வாழ்ந்து வரும் உலகிற்கு எந்தளவிற்கு பொருத்தமாக இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துப்பார்க்கவும் மற்றும் மனிதகுலம் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை சரிசெய்யவும் மற்றும் இஸ்லாத்தின் மகத்தான நீதியை மீண்டும் நிலைநாட்டும் மகத்தான பொறுப்பை முஸ்லிம்களாகிய நாம் கொண்டுள்ளோம்  என்பதையும் உணர கடமைபட்டிருக்கிறோம். 

 -யாஸ்மின் மாலிக். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *