அமெரிக்கத் தேர்தலும் மேற்குலகில் நிலவிவரும் தலைமைத்துவ நெருக்கடியும்!
بسم الله الرحمن الرحيم
தலைமைத்துவ நெருக்கடியும்!
செய்தி:
அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தேவையான தனது கட்சியினரின் வாக்குகளை அவர் பெற்றுள்ளார் என ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்:
மேற்குலகம் தற்போது கடுமையான தலைமைத்துவ நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை புரிந்துகொள்வதற்கு நாம் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களையும் இதன்பிறகு அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கவிருக்கும் தேர்தல்களையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இதுவரை நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இந்த நாடுகளில் பதவிக்கு வருவதற்காக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்று மதியிழந்வர்களாகவோ அல்லது ஒரு மதிப்பைக் கொண்டு செயல்படும் சித்தாந்தத்தை பின்புலமாக கொண்டில்லாதவர்களாகவோ அல்லது அரசியல் தலைமைத்துவத்தை ஏற்பதற்குத் தகுதியற்றவர்களாகவோ காணப்படுகின்றனர் என்பதை நம்மால் தெளிவாக காணமுடிகிறது. அமெரிக்காவில், 81 வயதான பைடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார், அதேவேளையில் அவருக்கு பதிலாக டொனால்ட் டிரம்புக்கு எதிராக போட்டியிடுவதற்கு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களுக்கும் அல்லது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கப் போகும் உறுப்பினர்களுக்கும் சட்டியிலிருந்து தப்பித்து நெருப்புக்குள் குதிப்பதைத் தவிர அதாவது இவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை. டொனால்ட் டிரம்ப் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னைப் பற்றியே சிந்திக்கக்கூடிய நபராகவும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நபராகவும் இருப்பவர், அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் நாட்டை ஆள்வதற்கு போதுமான தலைமைத்துவ திறன்கள் குன்றியவராக இருக்கிறார்.
இது அமெரிக்காவில் மட்டுமே பரவலாகக் காணப்படும் பிரச்சனையாக இருக்கவில்லை, ஐரோப்பாவும் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டு வருவதை நம்மால் காணமுடிகிறது. பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களின் முடிவுகளும் அதில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதும் பொதுமக்களின் பார்வையில் அந்த நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து பல நிச்சயமற்ற சூழல்களை உருவாக்கியுள்ளன. அதற்கு மேலாக, நாட்டின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் அங்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தலைமைத்துவத்திற்கான நெருக்கடி ஐக்கிய இராச்சியத்தையும் பாதித்துள்ளது. இங்கிலாந்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நான்கு பிரதமர்கள் பதவியேற்று பிறகு விலகியுள்ளனர். பிரெக்சிட்டுக்குப் பின்னர், பிரித்தானியா ஓரு சரியான அரசியல் தலைவரைக் கண்டெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதுநாள் வரை அதனால் ஒரு நிலையான தலைவரை கொண்டுவர முடியவில்லை. இந்த நிலைமையானது மேற்கத்திய உலகில் ஒரு தீவிரமான தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தற்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த தலைவர்களுக்கு ஒப்பானவர்களாக இல்லை என்பது தான். தலைமைத்துவ பண்புகள், செயல்திறன், சர்வதேச அரசியல் மற்றும் மேற்கத்திய விழுமியங்களைக் குறித்தான புரிதல் ஆகியவற்றில், அவர்களுக்கு முன்பிருந்த தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களுடைய திறன்கள் மிகவும் தாழ்ந்து இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தலைவர்களின் உரைகளையும் அவர்களுடைய செயற்திட்டங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது, அவர்களின் நாடுகளும் அந்த நாடுகளின் முன்னாள் தலைவர்களும் பல ஆண்டுகளாக இந்த உலகத்திற்கு அழைப்பு விடுத்து வந்த மேற்கத்திய மதிப்புகளை தற்போது கொண்டிருக்கவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
இதேபோல், மதிப்புகளைச் சார்ந்த சித்தாந்தத்தைப் பொருத்தவரை, தமது போட்டியாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கும் மற்றும் அமெரிக்காவின் கூட்டணிகளை ஒன்றிணைப்பதற்கும் தேவையான கவர்ச்சியை சில தசாப்தங்களுக்கு முன்பு அமெரிக்காவை வழிநடத்திய ஜனாதிபதிகள் கொண்டிருந்ததைப் போன்று டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் கொண்டிருக்கவில்லை. இன்று, அமெரிக்கா மதிமறந்த, அனுபவமற்ற மற்றும் மிகவும் களைப்படைந்த தலைவர்களையே கொண்டுள்ளது, இது அமெரிக்காவின் அரசியல் நம்பகத்தன்மைக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பைடென் ஒரு முடங்கிப் போன அமெரிக்காவின் சின்னமாக தென்படுகிறார், டிரம்ப் ஒரு பித்து பிடித்த அமெரிக்காவின் சின்னமாக தென்படுகிறார், மற்றும் கமலா ஹாரிஸ் ஒரு விசித்திரமான பின்னணியைக் கொண்ட பலவீனத்தின் சின்னமாக தென்படுகிறார் என்று கூறலாம்.
இருப்பினும், அமெரிக்கா உட்பட பாரிய மேற்கத்திய தேசங்கள், தங்கள் செல்வாக்கு குன்றிய தமது தலைவர்களுக்கு எதிராக இருக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் அனைத்தும் பலவீனமாக இருக்கும் அதே நபர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு நாள் அவையனைத்தும் பலவீனமாகவும் சீர்கெட்டுப் போவதற்குமான வாய்ப்புகளும் உள்ளன.
தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி மேற்கின் வீழ்ச்சியையும் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. சித்தாந்தங்களின் வலு குன்றும்போது, அவை திறமையான தலைவர்களை உருவாக்கும் திறனை இழந்து விடுகின்றன. மேற்குலகம் தற்போது அத்தகைய நிலையை அடைந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தகைய திறமையற்ற, பலவீனமான தலைவர்களின் கைக்கூலிகளாக மாறி அவர்களுக்கு அதீத விசுவாசத்துடன் சேவை செய்து வருவது கைசேதத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. இன்றைய உலகு வழங்கியுள்ள ஏனைய சந்தர்ப்பங்களுக்கும் கூடுதலாக, மேற்குலகில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவத்தின் நெருக்கடியானது முஸ்லிம் உம்மத்திற்கு இந்த நெருக்கடியை அரசியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ளவும், பலவீனமான இந்த தலைவர்களின் செல்வாக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் மிகப்பெரியதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இன்றைய உலகிற்கு முஸ்லிம்களை வழிநடத்துவதற்கு மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கு தலைமைத்துவத்திற்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய இறைவிசுவாசமுள்ள, இறைபக்தியுள்ள, ஞானமுள்ள, நீதமான மற்றும் உறுதியான தலைவர்கள் மிகவும் தேவைப்படுகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டாவது நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபா (கிலாஃபா ராஷிதா) மட்டுமே இந்த நூற்றாண்டின் தஜ்ஜாலாக இருக்கின்ற மேற்கத்திய முதலாளித்துவ காலனித்துவ தீமையிலிருந்து இந்த உலகைக் காப்பாற்றும் துணிச்சலான, புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் நீதமான தலைவர்களை உம்மத்திலிருந்து வளர்த்தெடுக்கும்.
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ
மூஸா தம் சமூகத்தாரிடம்! “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் – தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் – இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.”
(அல்- குர்’ஆன் 7: 128)
- உமர் கலீல் பால்கி